இலவசத்தில் வாழப் பழகியவர்கள்மதுரசத்தில் மூழ்கிப் போனார்கள்.
உழைத்த தலைமுறை உளுத்த தலைமுறை
ஆக்கப் பட்டு விட்டது.
துய்ப்புக் கலாசாரம் உழைக்கும் நேரத்தை
உறிஞ்சி விட்டது.
உழைக்க முடியாத ஊனமுற்றவர்களுக்கும்,
கைவிடப்பட்ட முதியவர்களுக்கும்,
அநாதைக் குழந்தைகளுக்கும்,
ஆதரவற்ற நோயாளிகளுக்கும் தானே
இலவசம் பொருந்தும் ?
உற்பத்தி பெருக்காத இலவசம்
உற்பாதம் தானே விளைக்கும் ?
மதுக்கடை வாசல்களில் -
தவணை முறையில் செத்துக்
கொண்டிருக்கிறார்கள்
நம் விவசாயத் தொழிலாளிகள்.
மது என்பது உலகக் கலாசாரம் தான்.
ஒழிக்க முடியாது தான்;
மனித சமுதாயத்தின் பழம் பானம் தான்.
ஆனால் -
அருந்துபவனுக்கும் -
அருந்தப்படுவதற்குமான இடைவெளியில்
இருக்கிறது மதுவின் நன்மை – தீமை.
பெரும்பாலும் -
மேட்டுக்குடி மக்கள் மதுவை அருந்துகிறார்கள்.
ஆனால் உழைக்கும் மக்களை – மது அருந்துகிறது.
மேல் தட்டு மக்களின் உபரிப் பணத்தில்
கை வைக்கும் மது -
அடித்தட்டு மக்களின் -
உணவுப் பழக்கத்திலேயே கை வைக்கிறது.
தங்களுக்கு எதிராய் இந்தியர்கள்
கத்தி ஏந்தி விடக்கூடாது என்பதற்காகத் தான்
கள்ளுக்கடை திறந்தார்கள் வெள்ளையர்கள்.
புட்டிக்குள் அடக்கி வைத்திருந்தார்கள் -
தங்களுக்கு எதிரான பூதத்தை.
ஜனநாயக நாட்டில் -
பூதம் மட்டும் இன்னும் புட்டிக்குள்ளேயே
இருக்கிறது.