29.9.11

புதிய எழுத்தாளர்களுக்கு........


புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள் - சுஜாதா



 


1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். 'துருவனும் குகனும்' என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, 'போலீஸ் செய்தி'க்கு அனுப்பாதீர்கள்.

2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். 'பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்' என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.

3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி...

4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.

5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். 'உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.' என்று சொல்வதை விட 'துப்பினான்' என்பது மேல்.

6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். 'அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்... இத்தியாத்திக்குப் பதிலாக, 'அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.

7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.

8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட 'போனான்' என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக 'னான்' என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.

9. இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டுப் பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதிகள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் உடனே மற்றப் பத்திரிக்கைக்கு அனுப்ப செளகரியம்.

10. பத்திரிக்கை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.

11. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.

(தோரணத்து மாவிலைகள் - சுஜாதா)

15.9.11

அறிஞர் அண்ணா!!!

சென்னையிலுள்ள கன்னிமாரா நூல் நிலையத்துக்கு உலகில் எங்கு, எப்புத்தகம் அச்சிடப்பட்டாலும் ஒரு புத்தகம் உடனடியாக வந்துவிடும் காலம் அது!


அப்போது பாரதப் பிரதமராக இருந்த நேருவுக்கு ஓர் முக்கியமான புத்தகம் தேவைப்பட்டது. தனது செயலாளரிடம், அந்தப் புத்தகத்தைக் கன்னிமாரா நூல் நிலையத்திலிருந்து பெற்றுத் தரும்படி கூறினார். அவர் போன் போட்டுக் கேட்டும் புத்தகம் கிடைக்கவில்லை. யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள் என்று பதில் வந்தது.


 உடனே, அப்புத்தகத்தை எடுத்தச் சென்றது யார் என்று வினவினார்கள்.
  




 காலை 10 மணிக்குத்தான் அந்தப் புத்தகம் நூல் நிலையத்துக்கே வந்தததாம். 10.01-க்கு அண்ணாதுரை என்பவர் அதை எடுத்துச் சென்றுவிட்டார் என்ற பதிலைக் கேட்டு நேரு ஆச்சரியப்பட்டுப் போனார். நூலகத்துக்கு வந்த ஒரு நிமிடத்தில் புத்தகத்தை எடுத்துச் சென்றவர் அறிஞர் அண்ணாதான். படிப்பதில் அவ்வளவு ஆர்வம் மிக்கவர் அண்ணா!




நன்றி: தினமணி - சிறுவர்மணி (03.09.11)


அண்ணா ஒரு அறிஞர், சந்தேகமே இல்லை.  அவர் வழி வந்து தமிழ்நாட்டை, தமிழ் மக்களை கவர்ந்த இரு பெரும் கட்சிகள் அவரை போல் ஆர்வமோடு தமிழ் மக்களுக்கு தொண்டு செய்தால், மிக்க நன்று!!!

அண்ணா பிறந்தநாள் நல் வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்களுக்கு கிடைக்க போகும் மிக்சீ, கிரெயின்டர் ,லேப்டாப் மற்றும் இதரவைக்கும் சேர்த்து வாழ்த்துகள்!!!

பி.கு: அண்ணா படங்களுக்காக கூகிள் 'Anna' என்று தேடல் செய்தேன். 'அண்ணா ஹசாரே' படங்கங்களாக வந்து நின்றது. சரி பரவால்லை என்று, 'Annadurai' தேடல். அப்பொழுதும் சந்திராயன் 'அண்ணாதுரை' வந்தார். கடைசியில் பெரியாருடன் சிக்கினார் அறிஞர்!!!  







5.9.11

குருவின்றி அமையாது உலகு!

குரு என்ற சொல்லை உலகுக்கு அளித்தது இந்தியாதான். இப்போது உலக மொழிகளில் எல்லாம் ஆசான், முன்னோடி ஆகிய பொருள்படும்படி இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது

முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும். மாணவர்கள் தங்கள் அன்பின் அடையாளமாக வகுப்பு ஆசிரியர்களுக்கு மலர்க்கொத்து கொடுப்பதும், இனிப்பு வழங்குவதும், சில இடங்களில் பாராட்டு விழாக்களுமாக நடைபெறும் இந்த வேளையில், இன்றைய நவீன காலகட்டத்தில் ஓர் ஆசிரியர் என்பவரை எப்படித் தீர்மானிப்பது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். ஆனால், இன்று எல்லா வீடுகளிலும் ஆண்களும் பெண்களும் படித்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்லும் முன்பாகவே எழுத்துகளை, ஆங்கிலம், தமிழ் என அறிமுகம் செய்கிறார்கள். பொம்மைகளை, படங்களைக் கொடுத்துக் கற்பிக்கிறார்கள். குழந்தைகளின் வீட்டுப் பாடங்களைக்கூட சொல்லித் தருவதும், தானே போட்டுத் தருவதுமான வேலைகளையும் செய்யும் பெற்றோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. அவர்களே குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகிவிடுகிறார்கள். இதனாலேயே பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதிரிகளாக, எதிர் ஆளுமைகளாக மாறிப்போகிறார்கள்.

இன்றைய நவீன தொழில்நுட்பம், தகவல் தொடர்பு வளர்ச்சி எல்லாமும் இப்போது தாய், தந்தை, ஆசிரியர் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. பாடம் முழுவதையும் சொல்லித்தர குறுந்தகடுகள் வந்தாகிவிட்டன. வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் அதே பாடங்களை அப்படியே நடத்தும் அளவுக்கு இதன் தரம் இருக்கிறது. மேலும் ஒரு வகுப்பறையில் இருந்துகொண்டு, பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் பாடம் நடத்தும் வகையில் கணினியுடன் கூடிய வகுப்பறைகள் இன்று அறிமுகமாகத் தொடங்கிவிட்டன. அப்படியானால் யாரை ஆசிரியர் யாரை நல்லாசிரியர் எனக்கொள்வது?

ஒரு மாணவர் பள்ளியை விட்டு வெளியே சென்று சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனை ஆசிரியர்களின் பெயரை நன்றியுடன் நினைவுகூர்கின்றாரோ, எத்தனை பேரை அவர் திசை நோக்கி வணங்க நினைக்கின்றாரோ, தன் குழந்தைகளை ஒரு பள்ளியில் கொண்டு சேர்க்கும்போது தனக்கு வாய்த்த ஆசிரியர் போல தன் மகன், மகளுக்கும் கிடைக்கமாட்டாரா என்று எந்த ஆசிரியரை நினைத்து மனம் ஏங்குகின்றதோ அவர்கள் மட்டுமே நல்லாசிரியர்கள் என்று ஒரு பட்டியலைப் போட முடியும். இந்த அளவுகோலில் வருவோர் மட்டுமே நிஜமான, நிச்சயமான நல்லாசிரியர்களாக இருப்பார்கள். இவர்களில் பலர் நிச்சயமாக மத்திய, மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்களைப் போன்றவர்களால்தான் இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு தலைமுறையும் நன்றி சொல்லிக்கொண்டு முன்னேறிச் செல்கிறது.

இந்தவிதமான ஆசிரியர்களை ஒரு மனிதன் பின்னாளில் நினைக்கக் காரணம் என்ன என்பதை எண்ணிப் பார்க்கும்போது, ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெறும் வகையில் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தவரா அல்லது அவரது வகுப்பு வந்தாலே பயங்கர ஜாலி என்பதாலா அல்லது அவர் அன்பாகப் பழகினாரா, எதனால் அவரை மனம் தேடுகிறது?

அறிவை வழங்கும் ஆசிரியர்கள் வெறுமனே பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடத்தைத் திரும்பவும் அதே அளவில், அதே தரத்தில் மாற்றமின்றி மாணவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அறிவைப்புகட்டுபவரின் பணி இன்னும் சுவையானதாக , பிடிக்காத உணவையும் ஊட்டி விடும் சாமர்த்தியம் கொண்டதாக இருக்கிறது. ஆனால், மூன்றாவது வகை ஆசிரியர்கள் ஒரு மாணவரின் உள்ளே இருக்கும் திறமையை அவரே பார்க்கும்படியாகத் துலக்கி, பளபளப்பாக்கி விடுவார். அந்தத் தன்னொளி வழியில் அந்த மாணவர் நடந்து வாழ்க்கையில் பலபடி மேலே செல்வார். அப்படியாக ஒவ்வொருவரும் தனது அறிவின் ஒளியைத் துலக்கிக் காட்டியவர்களை எண்ணிப் பார்க்கிறார்கள். இது பள்ளி வகுப்பறையில் மட்டும்தான் நடக்க வேண்டும் என்பதில்லை. இவர்கள்தான் உண்மையிலேயே குரு. ஒரு மனிதனை அவருக்கே அடையாளம் காட்டுவதுதான் குருவின் பணியாக இருக்கிறது.

இத்தகைய ஆசான்கள்தான் ஒரு மனிதன் தன் தாய் தந்தையை மதித்துக் காப்பாற்ற வேண்டும் என்பதும், சமூகத்தில் அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் அறவாழ்வு வாழ்வதும், அனைவரையும் அன்பு செய்வதும் நமக்கு உள்ளே எப்போதுமே இருந்து வருகின்ற ஒளி என்பதை, அறிவைத் துலக்கி வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள் .

இவர்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது!

நன்றி: தினமணி-தலையங்கம்-05.09.11


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------


அனைவருக்கும் ஆசானாக விளங்கும்  இறைவனுக்கு நன்றி..
மழலைப் பருவம் முதல் என்னை செதுக்கி வரும் என் தாய், தந்தை மற்றும் ஐயா(தாத்தா) ஆகிய ஆசிரியர்களுக்கு நன்றி.

எனக்கு பாடம் சொல்லி தந்து, வளர்த்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக என் அப்பா(எல்லா பாடங்கள்), லக்ஷ்மி மிஸ் (கணக்கு),நித்யா மிஸ் (சமூக அறிவியல்),தமிழ்ச்செல்வி மிஸ்(கணக்கு), செந்தில்நாதன் சார்(கணக்கு), சலிலா மிஸ்(சமூக அறிவியல்), வள்ளிக்கண்ணு மிஸ் (தமிழ்), லக்ஷ்மி ஆச்சி (கணக்கு), செல்வ நம்பி சார்(கணக்கு), கீதா மிஸ்(கணக்கு) மற்றும் மதுரை ராமமூர்த்தி ஐயா, ராமானுஜம் சார், பாலா சார் , கமல் அண்ணா முதலியோருக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்.


எழுத்துலக ஜாம்பவான்கள் சிலரை நான் வணங்குகிறேன். என்னையும் என் சிந்தனயையும் செதுக்கிய எழுத்தாசிரியர்களான 'கல்கி' மற்றும் 'தேவன்' ஆகியோருக்கு என் நன்றிகள்!!! இவர்களால் நான் உலகை மறந்து விடுகிறேன், பல சமயங்களில்!!!


ஆசிரியர் பணி, அறப் பணி!!!


1.9.11

விநாயகர் சதுர்த்தி!!!




அப்பா ,பிள்ளையார் அப்பா: பக்தி கொடு, ஞாநம் கொடு,        வைராகியம் கொடு!!!  


வினைகளை தீர்க்கும் வினாயகா உன்னை வணங்குகிறேன்!!!


செட்டிநாட்டுக்கு சொந்தமான கற்பக விரிக்க்ஷமே: கற்பக கடவுளே உன்னை வாழ்த்துகிறேன்!!!


மாஹாபாரதம் எழுதியவனே உன்னை போற்றுகிறேன், அருணகிரிநாதரின் கவிதையால்

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் - அடிபேணிக்

காற்றிடு மடியவர் புத்தியி லுரைபவர்
கற்பக மெனவினை - கடிதேகும்

..................................................................
.........................................................

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட வெழுதிய முதல்வோனே!





நர்தனமாடும் நாமசிவாயத்தின் மகனே: நன்மைகளை அருள்வாய்!!!



இன்றோ விடுமுறை : அவல், பொரி, மோதகம் என பலவற்றை உனக்கு தந்து அதை பிரசாதமாக உண்டு மகிழ்கிறேன்!!!


இவரை மறந்த விட கூடாது. செல்வ விநாயகர். எங்கள் வீட்டின் நாயகர். கூடவே உள்ளார் எங்கள் சின்ன வீர விநாயகர்!!!


உன்னை வாழ்த்தி வேண்டி வணங்கி நிற்கிறேன்!!! அருள் செய்!!!