13.10.11

இரவை ‘நைட்’ என்றாய்!

உணர்ச்சிகளை ஒருங்கே அள்ளிக்குவித்து,ஒவ்வொருவனையும் விளிப்படையச்செய்யும் வீர வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் காசிஆனந்தன். அவரது கவி வரிகளால் உணர்வு
பெறாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அப்படியிருந்தால் அவன் உணர்வற்றவனாகவே
இருப்பான்.

எம் இன் தமிழுக்குள் மாற்றான் மொழி புகுந்து ஆட்டுவிக்கிறது.தமிழை பேச
வெட்கப்படும் தமிழனும் இருக்கத்தான் செய்கிறான் எம்முள், ஆனாலும் எம் உணர்ச்சிக் கவிஞரின் "தமிழா நீ பேசுவது தமிழா?" என்ற கவி வரிகள் அவனை வெட்கித்தலை குனிய வைக்கும் என்பது திண்ணம். எல்லா மொழியையும் பேசுவோம் ! தமிழ் மொழியை கலப்பில்லாமல் பேசுவோம்.இதோ என்னை உலுப்பிய வீர வரிகள்.

தமிழா!
நீ
பேசுவது தமிழா?


அன்னையைத் தமிழ்வாயால்
‘மம்மி’ என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை
‘பேபி’ என்றழைத்தாய்…
என்னடா, தந்தையை
‘டாடி’ என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்…

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை ‘லவ்’ என்றாய்
உதவாத சேர்க்கை…
‘ஒய்ப்’ என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை…
இரவை ‘நைட்’ என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை ‘ஸ்வீட்’ என்றாய்
அறுத்தெறி நாக்கை…

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
‘லெப்ட்டா? ரைட்டா?’
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி ‘பைட்டா?’
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் ‘லேட்டா?’
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
‘பிரண்டு’ என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
‘சார்’ என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
‘வாக்கிங் ஸ்டிக்கா’
பாட்டி உதட்டுல
என்ன ‘லிப்ஸ்டிக்கா?’
வீட்டில பெண்ணின்
தலையில் ‘ரிப்பனா?’
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

நன்றி: நல்லறம்!-Wordpress Blog

No comments: